தெற்குகள்ளிகுளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோனியார் ஆலய 92-வது திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக புனித மிக்கேல் அதிதூதர் சப்பரம் ரதவீதிகளில் பவனியாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து புனித அந்தோனியார் உருவத்துடன்கூடிய கொடியை தர்மகர்த்தா மருத்துவர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் ஊர் பெரியவர்கள் எடுத்து வந்தனர்.

அருட்தந்தையர் ஜெபநாதன், பீற்றர் பாஸ்டியான், ரூபன் ஆகியோர் கொடியை ஜெபம் செய்து அர்ச்சித்தனர். பின்னர் தர்மகர்த்தா கொடியேற்றினார்.

நிகழ்ச்சியில் ஹெலன் பிளாரிட்டி மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மைய இயக்குநர் அருட்தந்தை ஒய்.தேவராஜன், ஓஎல்எஸ்.மெட்ரிக் பள்ளி தாளாளர் வின்சென்ட், பங்குத் தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்குத் தந்தை ஜெபஸ்டின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையில் திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. வரும் 15-ம் தேதி 8-ம் திருவிழாவன்று காலை திருப்பலியில் புனித அந்தோனியாருக்கு பொங்கலிட்டு கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து புனிதரின் தேர் பவனியும், பின்னர் விளையாட்டுப்போட்டியும் நடைபெறுகிறது.

9-ம் திருவிழாவன்று இரவு சிறப்பு மாலை ஆராதனையும், 10 மணிக்கு புனித அந்தோனியாரின் அலங்கார தேர்பவனியும் நடைபெறுகிறது. வரும் 17-ம் தேதி 10-ம் திருவிழாவன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை செயலாளர் அருட்தந்தை நார்பர்ட் தாமஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா தலைமையில் பங்குத் தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்குத் தந்தை ஜெபஸ்டின், அருட்சகோதரிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்