சிறை வார்டர் உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 7 பேரும் குண்டர் சட்டத்தில் கைது வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவு

By செய்திப்பிரிவு

வேலூரில் பழிக்குப் பழியாக நடைபெற்ற சிறை வார்டர் உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி எம்எல்ஏ ராஜா உட்பட 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (27) என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரியூரைச் சேர்ந்த எம்எல்ஏ ராஜா உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், அசோக்குமார் கொலைக்கு பழிவாங்க அவரது நெருங்கிய நண்பர்களான காமேஷ் (27), புழல் சிறையில் பணியாற்றிவந்த வார்டர் தணிகைவேலு (26), திவாகர் (26) உள்ளிட்டோர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, சென்னையைச் சேர்ந்த கூலிப்படையினர் உதவியுடன் எம்எல்ஏ ராஜாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். மேலும், ‘சுடுகாடு ராஜாவை வரவேற்கிறது’ என்று வாட்ஸ்-அப் மூலம் சிலருக்கு தகவல் பரப்பியுள்ளனர்.

இந்த தகவலை தெரிந்துகொண்ட எம்எல்ஏ ராஜா, தன்னை கொலை செய்ய திட்டமிட்டவர்களை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி இரவு வேலூர் அடுத்த புலிமேடு பகுதியில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த சிறை வார்டர் தணிகைவேலு, திவாகர் ஆகியோரை எம்எல்ஏ ராஜா தலைமையிலான கும்பல் கட்டிவைத்து சரமாரியாக வெட்டிகொலை செய்தது.

தொடர்ந்து, அரியூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற காமேஷ் மற்றும் அவரது நண்பர் பிரவீன் குமார் ஆகியோரையும் வெட்டிவிட்டு தப்பினர். இதில், காமேஷ் உயிரிழந்த நிலையில் பிரவீன்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பழிக்குப்பழியாக நடைபெற்ற 3 கொலை வழக்கு தொடர்பாக அரியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததுடன் கொலையில் தொடர்புடைய எம்எல்ஏ ராஜா உட்பட 7 பேர் கும்பல் காரில் தப்ப முயன்றபோது கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய பாகாயம் காவல் ஆய்வாளர் சுபா, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்துக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில், ராஜ்குமார் என்ற எம்எல்ஏ ராஜா (37), ராஜா என்ற சேம்பர் ராஜா (36), பல்சர் சுனில் (34), அப்பு என்ற உமாமகேஸ்வரன் (29), அப்பு என்ற ரோகித் குமார் (31), டீன் என்ற லோகேஷ் (23), ஆனந்தன் (24) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரே வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்