பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மண் பானையில் பொங்கல் வைப்பது பாரம்பரிய வழக்கம். காலப்போக்கில் மண் பானைகளின் பயன்பாடு குறைந்து, பித்தளை, வெள்ளி, அலுமினியப் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. தற்போது மண் பானைகளின் மகத்துவம் பற்றிய விழிப்புணர்வு காரணமாக, மக்கள் மீண்டும் மண் பானை சமையலுக்கு மாறிவருகின்றனர். கிராமப்புறங்கள் மட்டுமின்றி, நகர்ப்புறங்களிலும் கணிசமான மக்கள் மண் பானையில் பொங்கல்வைக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
நடப்பாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, மண் பானைகள் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது. கோவை கவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொங்கல் பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
ஆனால் கரோனா ஊரடங்கு, பணத் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் தற்போது எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை என்றும், பண்டிகை நெருங்கும் நாட்களில் விற்பனைதீவிரமாகும் என எதிர்பார்ப்பதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் (குலாலர்) சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் எல்.ஐ.சி. மருதாசலம் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:
மண்பாண்டத் தொழிலை நம்பி மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 8 லட்சம் குடும்பத்தினரும், கோவையில் பல ஆயிரம் பேரும் உள்ளனர். கோவையில் 200-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர். கோவை, விழுப்புரம், மதுரை, மானாமதுரை, திருக்கோவிலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மண் பானை தயாரிப்பாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகை சமயத்தில் ஒரு லிட்டர், 3 லிட்டர், 5 அல்லது 7 லிட்டர் கொள்ளளவு கொண்ட மண்பானைகள் தயாரிக்கப்படுகின்றன. அதற்கு வண்ணங்களும் பூசப்படுகின்றன. குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.500 வரைக்கும் பானை விற்பனை செய்யப்படுகிறது. களிமண், வண்டல் மண் கலவையில் கசடுகளை அகற்றி, திருவியில் வைத்து திருவி பானை தயாரிக்கப்படும். பின்னர் காயவைத்து, சூளையில் வேக வைத்து மீண்டும் காய வைத்தால் மண்பானை தயார். ஒரு செட் பானை செய்வதற்கு குறைந்தபட்சம் 6 மணி நேரம் தேவை. அவற்றை வேக வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு 2 நாட்களாகும்.
கோவையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை சமயத்தில், சிறிய பானைகள் ஏறத்தாழ 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம்எண்ணிக்கையிலும், பெரிய பானைகள் ஆயிரம் முதல் 2 ஆயிரம் எண்ணிக்கையிலும் விற்றுவிடும். ஆனால், நடப்பாண்டு எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகவில்லை. இது இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு பெரிய இழப்பாகிறது. ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் விநியோகிக்கப்படும்போது, மண்பானைகளையும் விநியோகிக்க வேண்டும். இதன் மூலம் இத்தொழிலை நம்பியுள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் என அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அரசிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. பொதுமக்களாவது மண்பானைகளை வாங்கி பொங்கல் வைக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago