முட்டை, கறிக்கோழி வலை சரிவால் பண்ணையாளர்கள் கவலை

By செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகை நெருங் கும் நிலையில், கறிக்கோழி கொள்முதல் விலை, முட்டை விலை குறைந்ததால் பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கறிக்கோழிகள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

பண்ணைக் கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.இ) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஜனவரி 5-ம் தேதி கிலோ 92 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை, நேற்று 14 ரூபாய் சரிந்து கிலோ ரூ.78 என நிர்ணயமானது. இதனால், பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

மேலும், கேரளாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக அங்கு முட்டை நுகர்வு குறைந்துள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் நேற்று முன்தினம் முட்டை விலை ஒரே நாளில் 25 காசுகள் சரிந்து 485 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், தமிழகத்தில் 50 சதவீதம் மட்டுமே கறிக்கோழி விற்பனை இருக்கும். இந்த நிலையில் கொள்முதல் விலை சரிந்துள்ளது கவலையளிக்கிறது. பறவைக் காய்ச்சலுக்கும், கோழிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கேரளாவில் வாத்துக்கு மட்டுமே பறவைக் காய்ச்சல் நோய் தாக்கி உள்ளது. கறிக்கோழி பண்ணைகளில் தேக்கம் இல்லை. வாரம் ஒன்றுக்கு ஒரு கோடியே 10 லட்சம் கோழி விற்பனை செய்வது தொடர்கிறது, என்றார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நாமக்கல் மண்டலத் தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் கூறுகையில், கேரள மாநிலத்தில் நிலவும் பறவைக் காய்ச்சல் காரணமாக முட்டை நுகர்வு 15 சதவீதம் குறைந்துள்ளது. எனினும், முட்டை அனுப்புவதில் எந்த பாதிப்பும் இல்லை. தேக்கம் எதுவும் இல்லை, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்