புகழூர் கதவணை மூலம் 0.8 டிஎம்சி தண்ணீரை சேமிக்கலாம் சுற்றுலாத்தலமாக மாறவும் வாய்ப்பு

காவிரி ஆறு மேம்பாட்டுக்காக ‘நடந்தாய் வாழி காவிரி' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கரூர் மாவட்டம் நஞ்சை புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406.50 கோடியில் புதிதாக கதவணை அமைக்கப்பட உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமை யில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில மாதங்களுக்கு முன் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்டத்தின் நஞ்சை புகழூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் அனிச்சம்பாளையத் துக்கு இடையே, கரூர் மாவட்டத்தில் வாங்கல் வாய்க்காலின் தலைப்பு மதகின் கீழ் 200 மீட்டர் தொலைவில் இந்த கத வணை அமைக்கப்பட உள்ளது. 1,056 மீட்டர் நீளத்தில் 73 ஷட்டர்களுடன் அமைக் கப்படும் நஞ்சை புகழூர் புதிய கதவணை மூலம் 0.8 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும்.

இந்த கதவணை 3.6 லட்சம் கன அடிநீரை வெளியேற்றும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. புதிய கதவணை மூலம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் நீரேற்று நிலையத்துக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்க இயலும்.

மேலும், காவிரி ஆற்றின் வலதுபுறம் உள்ள வாங்கல் வாய்க்கால் மூலம் 1,458 ஏக்கர் நிலங்களும், இடதுபுறம் உள்ள மோகனூர் வாய்க்கால் மூலம் 2,583 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் மேம்ப டுவதோடு, இப்பகுதி சுற்றுலாத்தலமாகவும் மாறும்.

இதுகுறித்து நெரூர் மற்றும் வாங்கல் வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் முத்துக்குமாரசாமி கூறியது: இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதல்வர் பழனிசாமி முயற்சியால் நஞ்சை புகழூர் கதவணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தற்போது காவிரி ஆற்றின் மட்டத்தைவிட வாங்கல் வாய்க்காலின் மட்டம் உயரமாக உள்ளதால் காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக தண்ணீர் திறந்து விட முடியாத நிலை இருந்தது. தற்போது கதவணை அமைந்தால், அப்பகுதியில் தேங்கும் நீரால் நீர்மட்டம் உயர்ந்து வாங்கல் வாய்க்காலில் தானாகவே நீர் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

புகழூர் மற்றும் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் நடேசன் கூறியது: புகழூர் மற்றும் பாப்புலர் முதலியார் பாசன வாய்க்கால்கள் மூலம் 8,500 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. புதிய கதவணை மூலம் இப்பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் செறிவூட்டம் பெறும். மேலும், இப்பகுதியில் கால்நடை, மீன் வளர்ப்பு, தொழில்வளம், விவசாயம் சார்ந்த தொழில்கள் பெருகும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்