ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு 15 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை திருப்பத்தூரில் அமைச்சர் கே.சி.வீரமணி பார்வையிட்டு ஆய்வு

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 15 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை பணி நேற்று நடைபெற்றது. இதில், 375 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழகத்தில் விரைவில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தவுள்ளனர். இதற்கான பட்டியல் மாவட்ட அளவில் தயார் நிலையில் உள்ளது. இந்தப் பணிகள் தடையில்லாமல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்பான ஒத்திகை நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு மையத்துக்கு தலா 25 பேர் வீதம் ஒத்திகையில் பங்கேற்க ஏற்பாடு செய்திருந்தனர்.

வேலூர் மாவட்டம்

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கரோனா தடுப்பூசி மருந்துகள் முதற் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படவுள்ளன. வேலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது தினசரி 100 பேர் வீதம் 50 மையங்களிலும் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு படிப்படியாக முதியோர், காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு செலுத்தப்படும். எங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற விவரம் சம்பந்தப்பட்டவர் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி யாக அனுப்பப்படும். ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

தடுப்பூசி போட்டுக் கொண்டதும்அவர் சிறிது நேரம் கண்காணிக்கப்படு வார். ஏதும் விளைவுகள் இல்லை என்று தெரிந்த பின்னர் அவர் வீட்டுக்குச் செல்லலாம். கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்காக மாவட்டத் தில் 500 பேருக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது’’ என்றார்.

முன்னதாக, வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஏலகிரி வளாகத்தில் கரோனா தடுப்பூசி வைக்கப்படும் குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். அப்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நல அலுவலர் சித்ரசேனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை பணியை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று பார்வையிட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் முதற் கட்டமாக 4 ஆயிரம் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த பட்டியல் தயாரித்துள்ளனர். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திலீபன், வட்டார மருத்துவ அலுவலர் சுமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை பணி நேற்று நடைபெற்றது. வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகை பணியை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதல் நிலை மருத்துவர் சிங்காரவேலு, சுகாதார நல அலுவலர் வீராசாமி மோகன் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 15 மையங்களில் 375 பேர் முதற்கட்ட ஒத்திகையின்போது பங்கேற்க தேவை யான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

தி.மலையில் ஆட்சியர் ஆய்வு

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தி.மலை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது. இதனை, ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது, “திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, போளூர் அரசு மருத்துவமனை, செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை, தி.மலை நகர ஆரம்ப சுகாதார நிலையம், ஆரணி நகர ஆரம்ப சுகாதார நிலையம், காட்டாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாவல்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெருங்கட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அத்தியந்தல் ரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவ மனை ஆகிய 9 மருத்துவமனைகளில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது’’ என்றார்.

அப்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமால்பாபு, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் கண்ணகி, சுகா தாரத் துறை துணை இயக்குநர் அஜிதா மற்றும் பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்