தமிழகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன, என சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா தெரிவித்தார்.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் நேற்று காணொலி மூலம் மூன்றாம் பாலினத்தவருக்கான நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமூக அந்தஸ்து அளிக்கும் வகையில் அவர்களுக்காக தனி கமிஷன் அமைக்கப்பட்டது. மேலும், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பில் தனி செல்போன் அப்ளிகேஷன் உருவாக்கப் பட்டுள்ளது. இதில் இதுவரை 12 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 7 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஒரு மூன்றாம் பாலினத்தவர் போலீஸ் எஸ்ஐயாகவும், ஒருவர் பிஸியோ தெரபிஸ்டாகவும், 8 பேர் செக்யூரிட்டி கார்டாகவும், 4 பேர் சமூக நலத்துறையிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் பல்வேறு உதவிகள் மூலம் மூன்றாம் பாலினத்தவர்கள் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் உயர்ந்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தில் குறைபாடு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் முட்டைகள் 100 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது, என்றார்.
நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப.ஜான்சி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago