கீழ்பவானி, காலிங்கராயன் மற்றும் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால்களைப் புனரமைக்க ரூ.940 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, பன்னீர் செல்வம் பூங்காவில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வர்த்தகர் அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணைமேயர் கே.சி.பழனிசாமி, பகுதி கழக செயலாளர் பெரியார் நகர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பன்னீர் செல்வம் பூங்காவில் தொடங்கி வீரப்பன்சத்திரம், சித்தோடு, சென்னிமலை, ஓடாநிலை, அறச்சலூர், அவல்பூந்துறை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, பெருந்துறையில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இதனிடையே ஈரோடு நகர தொழில்முனைவோர், வழக்கறிஞர்கள் மருத்துவர்களுடன் கலந்துரையாடல், மஞ்சள் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், கைத்தறி மற்றும் தறி தொழில் முனைவோர் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் முதல்வர் பங்கேற்றார்.
ஈரோடு மாவட்ட பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஈரோடு - சித்தோடு - கோபி வரை நான்குவழிச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. கீழ்பவானி, காலிங்கராயன் மற்றும் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால்களைப் புனரமைக்க ரூ.940 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிவடைந்து, 90 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்புகளுக்கு காவிரி குடிநீர் வழக்கப்படும்.
ஈரோடு மாநகரில் ஏழை மக்கள் குடியிருக்க 1850 வீடுகள் கட்டிக் கொடுக்கிறோம். ரூ.62 கோடியில் அரசு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை அமைக்கும் பணி நடக்கிறது. ரூ.70 கோடியில் ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தரும் பணி நடக்கிறது.
பெரும்பள்ளம் ஓடை அழகுபடுத்த ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாயப்பட்டறைக் கழிவுநீரைச் சுத்தப்படுத்த 26 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி வழங்கியவுடன், கழிவுநீர் சுத்திகரித்து வெளியேற்றப்படும்.
நடந்தாய் வாழி காவிரி திட்டத்தில் மேட்டூர் முதல் காவிரி கடலில் சேரும் வரை எங்கு அசுத்த நீர் கலக்கிறதோ, அங்கெல்லாம் சுத்திகரித்து நீரை ஆற்றில் விடவுள்ளோம். பிரதமரைச் சந்தித்தபோது, இந்த திட்டத்தை நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் குடியரசு தின உரையின்போது இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago