திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் நிலத்தை காலி செய்யவும் கோயில் நிர்வாகம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து கோயில் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நேற்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு அண்மையில் கோயில் நிர்வாகம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
அதில், ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருபவர்கள் 30 நாட்களுக்குள் இடத்தை காலி செய்து, கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 73 மற்றும் 79 விதிகளின்படி அந்த இடங்களை கோயில் வசம் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கோயில் நிலத்தில் குடியிருந்து வருபவர்கள் பல ஆண்டுகளாக பல லட்சக்கணக்கான ரூபாய் வாடகை செலுத்தாமல் உள்ளதற்கும் கோயில் தரப்பிலிருந்து தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நோட்டீஸ் பெற்றவர்கள் ரங்கம் ரங்கநாதர் கோயிலின் உள்ளே உள்ள இணை ஆணையர் அலுவலகத்தின் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு, கோயில் நிர்வாகத்துக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அப்போது, அங்கு வந்த காவல் துறையினர், அனுமதி பெறாமல் கோயிலுக்குள் போராட்டம் நடத்தினால், கைது செய்ய வேண்டியிருக்கும் என தெரிவித்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து, கோயிலுக்குள் போராட்டம் நடத்தி, கோயில் ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரங்கம் காவல் நிலையத்தில் கோயில் இணை ஆணையர் பொன்.ஜெய ராமன் புகார் அளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago