திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி நிகழ்ச்சியில் பேசியதாவது:
மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவ, மா்ணவியருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு செய்த காரணத்தால் இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் 10 மாணவ, மாணவியர் மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
அடுத்த ஆண்டில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்படு வதால் அதிக அளவில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடங்கள் கிடைக்கும். பள்ளிபாளையம் அரசு ஆண்கள் பள்ளியில் மட்டும் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 2020–21-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4.06 கோடி மதிப்பில் 10,304 விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளன, என்றார்.
முன்னதாக திருச்செங்கோட்டில் 13 பள்ளிகளைச் சேர்ந்த 1,584 மாணவ, மாணவியருக்கு ரூ.62.35 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளும், பள்ளிபாளையத்தில் 14 பள்ளிகளைச் சேர்ந்த 1,678 மாணவ, மாணவியருக்கு ரூ.66.01 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டி களும் வழங்கப்பட்டன. மேலும், எலச்சி பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 396 மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் ப. மணிராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஆர். சாரதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ. அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் வ. ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago