வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வானொலி நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் முன் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும்.

அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் அதிகமானோர் அதன் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து பி.அய்யாக்கண்ணு கூறும்போது, ‘‘வேளாண் சட்டங்களை தமிழகத்தில் விவசாயிகள் எதிர்க்கவில்லை என்று சிலர் தொடர்ந்து தவறான தகவல்களை கூறி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக என் மீது இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, தவறான தகவல்களை கூறி வருவதைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்