தமிழகத்தில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
வரும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, திருச்சி மாவட்டம் முசிறி, காட்டுப்புத்தூர், பாலசமுத்திரம், கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக திருச்சி வந்திருந்த அவர், மறைந்த முதல்வர் கருணாநிதி, லால்குடி அருகே கல்லக்குடி ரயில் நிலைய தண்டவாளத்தில் படுத்து இந்திக்கு எதிராக போராட்டம் நடத்திய இடத்தைப் பார்வையிட்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் இந்தியைத் திணிக்க வேண்டும் என மத்திய பாஜக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் அனுமதிக்கமாட்டார்கள். இந்தி மொழிக்கு நாங்கள் எதிரி கிடையாது. ஆனால் இந்தி திணிப்பை எப்போதும் எதிர்த்து நிற்போம் என்றார்.
அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மு.க.அழகிரி பேசியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘அவர் என்ன பேசினார் எனத் தெரியாது. அந்த செய்தியை நான் பார்க்கவில்லை’’ என உதயநிதி பதிலளித்தார்.
அவருடன் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, அரியலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் சென்றனர்.
பின்னர், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
அதிமுக ஆட்சிக்கு 2 வகைகளில் முடிவு காத்திருக்கிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், இந்த ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிடுவார். அப்படி இல்லாவிட்டால், சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் இந்த ஆட்சியை மக்களே வீட்டுக்கு அனுப்பி விட்டு, திமுகவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பார்கள் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago