பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை புளியரை சோதனைச் சாவடியில் ஆட்சியர் ஆய்வு

By செய்திப்பிரிவு

பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக புளியரையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார்.

கேரள மாநிலத்தில் வாத்து களுக்கு பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டம் புளியரையில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் முகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முகாமை ஆட்சியர் சமீரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆட்சியர் கூறும்போது, “ பறவை காய்ச்சலானது ராஜஸ்தான், இமாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தென்காசி மாவட்ட எல்லையான புளியரை யில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வா ளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் கிருமி நாசினி தெளிப்பவர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர மாக சோதனை செய்யப்பட்டு கோழிகள், வாத்துகள், முட்டைகள், கோழித் தீவனங்கள், கோழி இறைச்சிகள் மற்றும் கோழிக் கழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டு, உடனடியாக திருப்பி கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும், கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளித்த பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படு கின்றன.

தென்காசி மாவட்டத்தில் 223 பதிவு செய்யப்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இந்த கோழிப்பண்ணைகளின் உரிமையாளர்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கப்பட்டு ள்ளது. பண்ணைகளில் கோழிகளுக்கு ஏற்படும் அசாதாரண இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வனத்துறையின் மூலம் பறவைகள் கூடும் நீர்நிலைகள், பறவைகள் சரணாலயங்களை தொடர்ந்து கண்காணிக்கவும், அங்கு வரும் பறவைகளுக்கு நோய் அறிகுறி தென்படுகிறதா என கண்டறியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

குமரியிலும் கெடுபிடி

பறவை காய்ச்சல் பரவியதால் கேரளாவில் பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்து உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் அழிக்கப்பட்டன. தமிழக எல்லைப் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கன்னியா குமரி மாவட்டம் வரும் வாகனங் களை களியக்காவிளை மற்றும் படந்தாலுமூடு சோதனைச் சாவடிகளில் நிறுத்தி கால்நடை த்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.கோழி மற்றும் பறவைகளுக்கான தீவனங்களை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரும் வாகனங்கள் களியக்காவிளையில் இருந்து திருப்பி கேரளாவுக்கு அனுப்பப் படுகின்றன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின்பே கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்