பொன்முடி மீதான சொத்து குவிப்பு, செம்மண் குவாரி வழக்கு 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

திருக்கோவிலூர் எம்எல்ஏ பொன்முடி மீதான சொத்து குவிப்பு மற்றும்செம்மண் குவாரி வழக்கு 20-ம்தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக பொன்முடி எம்எல்ஏ, கவுதமசிகாமணி எம்பி., ராஜமகேந்திரன், லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோதகுமார், ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் ஆகிய 4 பேர் மட்டும் ஆஜராயினர். பொன்முடி எம்எல்ஏ., கவுதமசிகாமணி எம்பி, ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், இந்த வழக்கின் விசாரணையை வருகிற 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதேபோல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு பொன்முடி எம்எல்ஏ, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் தொடரப்பட்ட வழக்கும் நேற்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை.

அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து வழக்கறிஞர்கள் ஆஜராகி மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வருகிற 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்