நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் இன்று (6-ம் தேதி) ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஜவுளி மற்றும் துணி வியாபாரிகள் சங்க செயலாளர் சிதம்பரம் சரவணன் கூறியதாவது:
ஜவுளித்தொழிலுக்கு அடிப்படையாக விளங்கும் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே பஞ்சு விலை அதிகபட்சமாக 10 சதவீதம் கூட உயரவில்லை. ஆனால் நூல் விலை 40 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. அடிக்கடி உயரும் நூல் விலைக்கு ஏற்ப துணி விலையை உயர்த்தி விற்கமுடியவில்லை. கடந்த மாதம் 40-ம் நம்பர் வார்ப் நூல் ஒரு கோன் ரூ.195-க்கு விற்பனையானது. தற்போது ரூ.235-ஆக உயர்ந்துள்ளது. இந்த விலைஉயர்வால் ஜவுளித்தொழில் சார்ந்த அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருநிறுவனத்தினர் குறிப்பிட்ட ரக நூல்களை அதிகமாக உற்பத்தி செய்து, அதனை ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதே நேரத்தில் உள்நாட்டுத் தேவைக்கான பிற ரக நூலை, குறைவாக உற்பத்தி செய்து செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகின்றனர். இதன்காரணமாகவே சந்தையில் நூல் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையை மாற்றி, மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நூல் விலை உயர்த்தப்பட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், 6-ம் தேதி (இன்று) ஒருநாள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜவுளி விற்பனை நிறுவனங்கள், கடைகள், குடோன் போன்றவை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். மாவட்ட அளவில் 4000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago