ஈரோடு - சென்னை இடையேயான ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 10- ம்தேதி முதல் இயக்கப்படும் நிலையில், கோவை - சேலம், ஈரோடு - கோவை பயணிகள் ரயிலையும் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த ரயில்சேவைகள் படிப்படியாக தளர்வு பெற்று இயக்கப்பட்டு வருகின்றன. இதில், ஈரோடு - சென்னை இடையேயான ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 10-ம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக கோவை வரை செல்லும் பயணிகள் ரயில் மற்றும் ஈரோடு - கோவை பயணிகள் ரயிலையும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா கூறியதாவது:
கரோனா பாதிப்பு குறையும் நிலையில், ரயில்வே நிர்வாகம் தளர்வுகளை அறிவித்து சில சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த ரயில்களில் பொதுப்பெட்டி இல்லை என்பதால், முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடிகிறது.
ஈரோட்டில் இருந்து சேலம், திருப்பூர் மற்றும் கோவைக்கு பணி நிமித்தமாகவும், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காகவும், நாள்தோறும் பயணிக்கும் பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு சேலம் - கோவை பயணிகள் ரயில் மற்றும் கோவை - ஈரோடு பயணிகள் ரயிலை வழக்கம்போல், முன்பதிவில்லாத பெட்டிகளுடன் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago