பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா நாளை (7-ம் தேதி) நடக்கவுள்ள நிலையில், குண்டம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவின்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவர். இந்த ஆண்டு கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளுடன் குண்டம் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் தேர்த்திருவிழா, கடந்த 24-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நாளை (7-ம் தேதி) நடக்கிறது. இதற்காக பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் வழங்கும் எரிகரும்புகள் (விறகு) கோயில் வளாகத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை கோயில் முன்பாக 60 அடி நீள குண்டம் அமைக்கப்படவுள்ளது.
நாளை காலை நடக்கும் குண்டம் திருவிழாவின்போது, பூசாரிகள், சேவகர்கள் உள்ளிட்ட சிலர் மண்டும் குண்டம் இறங்க அனுமதிப்படுவார்கள் என்றும், பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அம்மனைத் தரிசிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago