கரூர் மாவட்டத்தில் மேலும் 10,000 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியம் சோமூர் ஊராட்சி திருமுக்கூடலூர் அம்பேத்கர் நகரில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் மற்றும் நெரூர் வடப்பாகம் ஊராட்சி ஒத்தக்கடையில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் ஆகியவற்றை மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அமைச்சர் பேசியது: கரூர் மாவட்டத்தில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 43 ஆயிரம் பேருக்கு முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதல்வரிடம் அனுமதி பெற்று மேலும் 10 ஆயிரம் பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
பின்னர், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி சங்கரம்பாளையத்தில் வரத்து வாரியில் ரூ.6 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஒத்தக்கடை ரேஷன் கடையில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை வழங்கினார்.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் கவிதா, கரூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago