தமிழக முதல்வர் பழனிசாமி, ஈரோடு மாவட்டத்தில் நாளை தொடங்கி இரு நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரு நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் இன்று (5-ம் தேதி) சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில், ஓய்வெடுக்கிறார். நாளை (6-ம் தேதி) மற்றும் 7-ம் தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
நாளை காலை 9 மணிக்கு பவானியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் பழனிசாமி, தொடர்ந்து கே.எம்.பி.மஹாலில் சிறு, குறு தொழில் முனைவோருடன் கலந்துரையாடல், அந்தியூரில் நடக்கும் பொதுக்கூட்டம், வாரி மஹாலில் நடக்கும் வெற்றிலைக் கொடி விவசாயிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து அத்தாணி, கள்ளிப்பட்டி, நால்ரோடு வழியாக சென்று சத்தியமங்கலத்தில் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து புன்செய் புளியம்பட்டியில் உள்ளூர் பிரமுகர் களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் நம்பியூர் வழியாக கோபி செல்லும் முதல்வர், இரவு 9 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
2-வது நாளாக 7-ம் தேதி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் பிரச்சாரத்தைத் தொடங்கும் முதல்வர், காலை 10 மணிக்கு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்து கல்வி நிலையத்தில் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து விட்டு, சித்தோடு செல்கிறார்.
வில்லரசம்பட்டியில் தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் ஊத்துக்குளி, சென்னிமலை வழியாக மாலை 4 மணிக்கு தீரன் சின்னமலை நினைவிடம் அமைந்துள்ள ஓடாநிலையில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும், விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
அன்று மாலை அறச்சலூரில் மகளிர் சுய உதவிக்குழுவினருடனும், பெருந்துறையில் கைத்தறித்தொழில் முனைவோர் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுடனும் கலந்துரையாடுகிறார்.
அன்றிரவு 7.30 மணிக்கு பெருந்துறையில் நடக்கும் பொதுக்கூட்டத்துடன் இரண்டாவது நாள் பிரச்சாரத்தை முதல்வர் நிறைவு செய்கிறார்.
இத்தகவல்களை அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago