குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகத்தை கீழப்பாவூர் மக்கள் முற்றுகை

By செய்திப்பிரிவு

கீழப்பாவூரில் குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் சந்தன நாடார் தெரு, பாரதியார் தெரு, சாமி நாடார் தெரு, கீரைத்தோட்டத் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் மனு அளித்தனர்.

அதில், ‘தங்கள் பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இங்கு, பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் ஏற்படும் கதிர்வீச்சால் குடியிருப்புப் பகுதியில் பாதிப்புகள் ஏற்படும். எனவே, செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

கடையநல்லூர் ஒன்றியம் கள்ளம்புளி அதிமுக கிளைச் செயலாளர் காளிமுத்து என்பவர் அளித்துள்ள மனுவில், ‘கள்ளம்புளி குளத்துக்கு தண்ணீர் வந்து பல ஆண்டுகளான நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இதில், அடவிநயினார் அணை பாசனத்திலிருந்து கள்ளம்புளி குளத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றால் குலையநேரி குளத்துக்கு தனிக் கால்வாய் அமைத்து தண்ணீர் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிறிதளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

குலையநேரி குளத்துக்கு கால்வாய் வெட்டும் திட்டத்தை நிறுத்த வேண்டும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுபோல் கள்ளம்புளி குளம் நிரம்பிய பின்னர் உபரி நீர் குலையநேரி குளத்துக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

கடையநல்லூர் அருகே உள்ளபோகநல்லூரைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் ரத்தினம் என்பவர்அளித்துள்ள மனுவில், ‘போகநல்லூர் சுந்தரேசபுரத்தில் கடந்த 1964-ம் ஆண்டு சிவசுப்பிரமணியன் என்பவர் ஐந்தரை சென்ட் இடத்தை போகநல்லூர் ஊராட்சிபயன்பாட்டுக்காக தானமாக வழங்கினார்.

அந்த இடம் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி, மீண்டும் ஊராட்சி பயன்பாட்டுக்கு இடத்தைகொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்