திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம்உலர்ந்த திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு நீள கரும்பு, துணிப்பை மற்றும் ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கான டோக்கன் வழங்கும் பணிகடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இதை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் 692 ரேஷன் கடைகள் உட்பட மொத்தம் 796 ரேஷன் கடைகள் மூலம்4,57,576 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ரூ.122.03 கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்திட்டத்தை திருநெல்வேலி அருகே மானூர் ரஸ்தா நியாயவிலைக் கடை மற்றும் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கக்கன் நகரில் உள்ள காயிதேமில்லத் புது நியாயவிலைக் கடையில் மாநிலஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, ‘‘தமிழகத்தில் 2.06 கோடிக்கும் மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணையிட்டது.
தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு மற்றும் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நடத்தப்படும் 648 நியாயவிலைக் கடைகள்மூலம் மொத்தம் 4,38,775 அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.117.01 கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது’’ என்றார்.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி, திருநெல்வேலி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சுபாஷினி, மாவட்ட வழங்கல் அலுவலர் கோகிலா முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 4,92,818 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கப் பணம் விநியோகத்தை கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், துணைப் பதிவாளர் சுப்புராஜ், சார்பதிவாளர் சேஷகிரி, நிர்வாக மேலாளர் அந்தோணி பட்டுராஜ், வட்ட வழங்கல் அலுவலர் வதனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள 960 நியாயவிலைக் கடைகள் மூலம்,4,92,818 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது. மக்கள் ஆர்வமுடன் நீண்டவரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இதேபோல், இலவச வேட்டி சேலை விநியோகமும் நேற்று தொடங்கியது. மொத்தம் 3,85,030 வேட்டிகள், 3,85,413 சேலைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 கோடியே 88 லட்சத்து 7 ஆயிரத்து 136.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, கோட்டாறு வாகையடித்தெரு, பறக்கை, சந்தையடி ஆகிய நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.ஆட்சியர் மா.அரவிந்த் கூறும்போது, “குமரி மாவட்டத்தில் 5,49,800 அட்டைதாரர்களுக்கு 770 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது” என்றார். சுரேஷ்ராஜன் எம்எல்ஏ, மாவட்ட ஆவின் தலைவர் அசோகன் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago