உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை மூலம் 7.50 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் பணி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கியது.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ஆரணி நகராட்சியில் உள்ள வைகை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, “தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அரிசி பெறும் 7 லட்சத்து 50 ஆயிரத்து 351 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் ஆகியவை, அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று (நேற்று) முதல் வரும் 12-ம் தேதி வரை வழங்கப்படும். மேலும், 6,61,774 பேருக்கு வேட்டி கள், 6,62,894 பேருக்கு சேலைகள் வழங்கப்படுகிறது” என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அரிதாஸ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago