கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் 7,561 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-1 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 24 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிந்தும், வெப்பமானி கொண்டு உடல் வெப்பநிலையை பரிசோதித்து, கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்ய பின்னரே அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வு, மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் க.பாலச்சந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, வட்டாட்சியர்கள் மகேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். மேலும், 24 முதுநிலைக் கண்காணிப்பாளர்கள், துணை ஆட்சியர் நிலையில் 5 பறக்கும் படை அலுவலர்கள், 9 நடமாடும் அலுவலர்கள், 40 தேர்வுக் கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் தேர்வைக் கண்காணித்தனர். தேர்வு எழுதுவோர் மையங்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில் தேர்வெழுத 11,888 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 5,109 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 6,679 பேர் தேர்வெழுதவில்லை.
வாக்குவாதம்
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில், சற்று தாமதமாக தேர்வெழுத வந்த மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. “10-க்கும் மேற்பட்டோர் 9.30 மணிக்கு வந்ததால் அனுமதிக்கவில்லை. 9.15 மணி வரையே மாணவர்களை அனுமதிக்குமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் 4,501 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். திருப்பூர் வடக்கு வட்டத்துக்கு உட்பட்ட பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளி, அங்கேரிபாளையம் சாலை கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.தேர்வெழுத அனுமதிக்கப்பட்டவர்களில் 2,064 பேர் மட்டுமே தேர்வெழுதினர். மீதமுள்ள 2,437 பேர் தேர்வெழுதவில்லை.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் 1,016 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி, ப்ரீக்ஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெத்லஹேம் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் நடந்த தேர்வில் 388 பேர் பங்கேற்றனர். 628 பேர் தேர்வெழுதவில்லை. பெத்லஹேம் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago