எலவனாசூர்கோட்டையில் ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று வழங்கி தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது:
ஏழை எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ரூ.100 மற்றும் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் தொடர் நிகழ்வாக, அவர் வழியில் செயல்படும் முதல்வர் பழனிசாமி ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு கடந்த ஆண்டு அறிவித்து வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் சென்ற முதல்வர், ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை கேட்டறிந்தார்.
பொங்கல் திருநாளை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக, எந்தவொரு அமைப்பும் கோரிக்கை வைக்காத நிலையில், குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பினை அறிவித்தார். இத்திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சிமாவட்டத்தில் மட்டும் 4,05,650 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர். இதற்கான தொகை ரூ.108.18 கோடி ஆகும். இத்திட்டத்தில் முறைகேடு ஏதேனும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக,வெளிப்படையாக ரூ.2,500 ரொக்கம் வழங்க வேண்டும் என தனியே ஆணை பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தி.க.பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago