புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனாவால் தள்ளிப்போன மொய் விருந்து விழாக்கள் இந்த மாதம்(மார்கழி) நடைபெற்று வரு கின்றன. ஆனால், விவசாயத்தில் போதிய வருமானம் இல்லா ததால், வசூல் மிகவும் குறைந் துள்ளதாக விழா நடத்துவோர் கவலை தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கறம்பக்குடி, அறந் தாங்கி வட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளாக ஆடி, ஆவணி மாதங்களில் மொய் விருந்து நிகழ்ச் சிகள் நடத்தப்பட்டு வந்தன. ஒரு மொய் விருந்து நிகழ்ச்சியை சுமார் 20 பேர் வீதம் ஆண்டுக்கு சுமார் 2,000 பேர் வரை நடத்துவார்கள். ஒவ்வொரு விழாவிலும் 5,000 பேரில் இருந்து 10,000 பேர் வரை கலந்துகொள்வார்கள். இதற்காக அசைவ விருந்து பரிமாறப்படும். ஒவ்வொருவரும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீதம் மொய் விருந்து விழாவை நடத்துவார்கள். ஒரு ஆண்டில் நடைபெறும் மொய்விருந்து விழாக்களில் மொத்தம் ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூலாகும்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆடி, ஆவணி மாதங்களில் மொய் விருந்து நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து, தற்போது மார்கழி மாதத்தில் இந்த மொய் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால், மொய் விருந்து நிகழ்ச்சிகளில் வசூல் கணிசமாக குறைந்திருந்த நிலையில், தற்போது மேலும் குறைந்துள்ளதாகக் கூறப்படு கிறது.
இதுகுறித்து மொய் விருந்து விழா நடத்துவோர் கூறியது:
கடந்த 2018-ல் வீசிய கஜா புயலால் அந்த ஆண்டு மட்டு மின்றி, மறு ஆண்டும் விளைச் சல் பாதிக்கப்பட்டது. கடந்த 2020-ல் கரோனா ஊரடங்காலும் விவசாயிகளுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக பணப் புழக்கம் சீராக இல்லாததால், எதிர்பார்த்த அளவுக்கு மொய் வசூலாகவில்லை. உதாரணமாக, 5 ஆண்டுகளில் ஒருவர் மற்றவர் களுக்கு ரூ.10 லட்சம் மொய் செய்திருந்தால், அவர் நடத்தும் மொய் விருந்தில் ரூ.30 லட்சம் வசூலாகும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக சுமார் ரூ.15 லட்சமே வசூலானது.
இந்நிலையில், கரோனா ஊரடங்கால் கடந்த ஆடி, ஆவணி மாதங்களில் மொய் விருந்து நிகழ்ச்சியை நடத்தாதவர்கள், வரும் தை மாதம் நடத்த திட்ட மிட்டிருந்தனர். இதில் ஒரு சிலர் மட்டும் கடந்த கார்த்திகை கடைசி, மார்கழி முதல் வாரத்தில் மொய் விருந்து நடத்தியபோது, எதிர்பார்த்ததை விட மிகவும் குறை வான தொகையே வசூலானது.
இதனால், தை மாதத்தில் மொய் விருந்து அதிகளவில் நடக்கும்போது, வசூல் மேலும் குறையலாம் என்பதால், தை மாதத்தில் நடத்த திட்டமிட்டிருந்த பலர் தற்போதே(மார்கழியில்) மொய் விருந்தை நடத்தி வருகி ன்றனர். இதிலும், ரூ.30 லட்சம் வசூலாக வேண்டிய இடத்தில், ரூ.10 லட்சம் மட்டுமே வசூலாவதால் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், ஆரவாரம், எழுச்சியின்றி மொய் விருந்து விழா நடந்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் மொய் செய்வோரின் எண்ணிக்கை படிப் படியாக குறையக்கூடும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago