விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
நரிக்குடி பகுதியைச் சேர்ந்த இருஞ்சிறை கிராமத்தின் மேற்கே
உள்ள முனியாண்டி கோயில் அருகே ஒரு சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. கிராம மக்கள் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து பாண்டிய நாட்டு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் ஸ்ரீதர் இந்தச் சிற்பத்தை ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இந்தச் சிற்பத்தின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு ஆகும். பாண்டிய நாட்டில் சமணம் மிகச் செழிப்பாக இருந்ததற்குத் தொடர்ந்து கிடைக்கும் தீர்த்தங்கரர் சிற்பங்களே சாட்சி. இந்தச் சிற்பம் சமணர்களின் 24-வது தீர்த்தங்கரரான மஹாவீரரின் சிற்பமாகும். 24 இன்ச் உயரமும் 24 இன்ச் அகலமும் கொண்ட இச்சிற்பத்தின் தலைக்கு இருபுறமும் சாமரங்கள் காணப்படுகின்றன. தலைக்கு மேல் அரை வட்ட வடிவ பிரபாவளி உள்ளது. இது ஞானத்தைக் குறிப்பதாகும். இந்த பிரபாவளிக்கு மேலே காணப்படுவது முக்குடை அமைப்பாகும். இதன் தத்துவமானது நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம். இந்த முக்குடையின் வலதுபுறம் சுருள் வடிவங்கள் காணப்படுகின்றன. இது கமுகமரம் அல்லது பிண்டிமரம் ஆகும்.
இந்தக் கமுக மரத்தின் கீழே அமர்ந்துதான் தீர்த்தங்கரர்கள் தவம் செய்வார்கள் என்பது ஐதீகமாகும். சிற்பத்தின் இடுப்பின் இருபுறமும் நீளமான திண்டு ஒன்று காணப்படுகிறது. அதன்மேல் பகுதியில் மகரப்பட்டை ஒன்று காணப்படுகிறது. தீர்த்தங்கரர் பத்மாசனக் கோலத்தில் காட்சி தருகிறார், என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago