திட்டங்களை கிடப்பில் போட்ட அதிமுக அரசு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில், தமிழகம் மீட்போம் எனும் தலைப்பில் 2021 சட்டப்பேரவை தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் மற்றும் 220 கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் காணொலிக்காட்சி மூலம் 7 இடங்களில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சென்னை யிலிருந்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: பெரம்பலூர் மாவட்டத்துக்கு தி.மு.க. ஆட்சியில் காவிரி, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம், கேந்திரிய வித்யாலயா பள்ளி, குரும்பலூர் அரசு கலைக் கல்லூரி, கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ), வேப்பந்தட்டையில் பருத்தி ஆராய்ச்சி மையம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், எம்.ஆர்.எஃப் டயர் தொழிற் சாலை, 3,300 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்ட லம், அரியலூர் சாலையில் ஒதியத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா முயற்சி யால், ஜெயங்கொண்டம் முதல் சேலம் வரை ரயில்வே திட்டம் கொண்டு வருவதற்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி ஆய்வுப் பணிகள் ஆகியவை நடைபெற்றன. ஆனால், திமுக அறிவித்த பல திட்டங்களை அதிமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, மாவட்டச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, நகரச் செயலாளர் எம்.பிரபாக ரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போது, அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம் உட்பட 14 இடங்களில் காணொலி வாயிலாக கட்சி நிர்வாகிகளுடன் ஸ்டாலின் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரியலூர் தனியார் உணவகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், திமுக சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திர சேகர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, மூத்த திமுக நிர்வாகிகள் 200 பேருக்கு பொற்கிழிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்