வேலூர் மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி முதல் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் எருது விடும் விழா நடத்த ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் விழா, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. மாவட்டத்தில் எருது விடும் விழா வரும் 16-ம் தேதி முதல் வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரை மட்டுமே நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, வரும் 4-ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு கரோனா விதிகளை கடைபிடித்து எருது விடும் விழா நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘எருது விடும் விழாவை திறந்த வெளியில் நடத்த வேண்டும். அதில், 50 சதவீதம் பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பார்வையாளர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதை மீறுபவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்.
விழாவில் காளையை அழைத்து வரும் உரிமையாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்கப்படுவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். காளையுடன் வருபவர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.
விழா நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்று பரிசோதனையை இலவசமாக செய்துகொள்ள வேண்டும். விழா நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பு சான்று பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அரசின் விதிமுறைகளை பின்பற்றி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் விழாவை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago