ஆங்கில புத்தாண்டையொட்டி போக்கு வரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், பாஸ்போர்ட் மற்றும் வேலை வாய்ப்புக்காக காவல் துறை சார்பில் நன்னடத்தை சான்றிதழ் வழங்கப்படாது என திருப்பத்தூர் எஸ்பி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆங்கில புத்தாண்டை யொட்டி திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் காவல் துறை பாதுகாப்பு தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது, மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வெளியே வரும்போது, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வணிக நிறுவனங்கள், கடைகள், மார்க்கெட் பகுதியில் வியாபாரம் செய்து வரும் வணிகர்கள் கூட்டத்தை கூட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மீறினால், உரிமையாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. அதன் மூலம் சாலை விதிமுறைகளை மீறுவோர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாத இடங்களில் வெளியே சுற்றித்திரிவதும், பெண்களை கேலி, கிண்டல் செய்தல், பொது இடங்களில் அநாகரீகமாக நடந்துக்கொள்வது உள்ளிட்ட முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபடு வோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனங்களை இயக்குவது தெரியவந்தால் அவர்களது பெற் றோர் மீது சட்ட நடவடிக்கை எடுக் கப்படும். சாலை போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு நடந்து கொள்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
வழக்குப்பதிவு செய்யப்படும் நபர்கள் வெளிநாடுகள் செல்லவும், வேலை வாய்ப்பு பெற காவல் துறை சார்பில் வழங்கப்படும் நன்னடத்தை சான்றிதழ் வழங்கப்படாது என்பதால் பொது மக்கள் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago