கோதாவரி–கங்கை இணைப்புத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என, நாமக்கல்லில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசினார்.
நாமக்கல் மாவட்டத்தில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தேர்தல் பிரச்சாரப் பயணத்தை, முதல்வர் பழனிசாமி நேற்று முன் தினம் தொடங்கினார். இதன்ஒரு பகுதியாக நேற்று முன் தினம் இரவு நாமக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்க இன்னும் நான்கு, ஐந்து மாதங்களே உள்ளன. அதிமுக வேட்பாளர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு, பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
அதிமுகவைப் பொறுத்தவரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்களை பற்றியே சிந்தித்தனர். அவ்வாறு சிந்தித்து, பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தனர். ஆனால் திமுகவை யோசித்து பாருங்கள்.
அவர்கள் குடும்பத்தை மட்டுமே சிந்திப்பார்கள். ஒரு வார இதழ் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், தமிழகம்தான் சட்டம் ஒழுங்கில் முதன்மையாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால், நில அபகரிப்பு, கட்டபஞ்சாயத்து, ரவுடியிசம் வந்துவிடும்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் சுற்றி வந்துள்ளேன். அதிமுக ஆட்சி அமைவது உறுதி. நாமக்கல் மாவட்ட மக்கள் முடிவு செய்துவிட்டனர். நாமக்கல் என்றாலே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இந்த ஆட்சியில், பல்வேறு திட்டங்களை தொடங்கி உள்ளோம். மருத்துவக்கல்லுாரி, சட்டக்கல்லுாரி கெண்டு வந்துள்ளோம். அதேபோல் ரூ. 286 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் கடந்த 2018-ம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.
நாமக்கல் நகர மக்களுக்கு, விரைவில், 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் கிடைக்கும். புறவழிச்சாலைக்கு, நில எடுப்புக்காக, 87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இழப்பீடு கொடுத்து, அந்த திட்டமும் நிறைவேற்றப்படும். கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்னர், நாமக்கல் எப்படி இருந்தது. 2011-க்கு பின் எப்படி இருக்கிறது என்று, நீங்கள் நீதிபதியாக இருந்து முடிவு செய்யுங்கள். கோதாவரி–கங்கை இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். அது எனது லட்சியம்.
ஸ்டாலின் என் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என நினைத்தார். அது நடக்கவில்லை. அதனால், தற்போது பொய் மூட்டைகளை அவிழ்த்து விட தொடங்கிவிட்டார், என்றார்.
முன்னதாக ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய இடங்களில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும், கூட்டத்திற்கு அமைச்சர் பி. தங்கமணி, தலைமை வகித்தார். அமைச்சர்கள் வெ.சரோஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி, வெ.சரோஜா, முன்னாள் எம்பி பி. ஆர்.சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago