ரேஷன்கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.கவினர் விநியோகிப்பதாக கூறி சென்னிமலையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் பண்டிகையை யொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக ரேஷன்கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கி வருகின்றனர். பல்வேறு இடங்களில் இந்த டோக்கனை அதிமுகவினர் நேரடியாக விநியோகம் செய்வதாக திமுகவினர் புகார் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், சென்னிமலை யூனியன் முகாசிபிடாரியூர் பகுதியில் பொங்கல் பரிசு டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் நேரில் சென்று வழங்காமல், அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று விநியோகித்ததாக கூறி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபு, முகாசிபிடாரியூர் திமுக ஊராட்சி செயலாளர் ஆறுமுகம், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொன்னுசாமி, முகாசிபிடாரியூர் துணைத் தலைவர் சதீஷ் என்கிற பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகள், சென்னிமலை - பெருந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பெருந்துறை டிஎஸ்பி செல்வராஜ், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ரேஷன்கடை அலுவலர்கள் மூலமே பொங்கல் பரிசு டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago