சத்தியமங்கலம் அருகே குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். அரசு மருத்துவர்களின் தவறுதலான அறுவைச் சிகிச்சைக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் - வைஜெயந்தி (24) தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வைஜயந்தி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
கடந்த சில நாட்களாக வைஜயந்திக்கு வயிற்று வலி ஏற்படவே, சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் கருவுற்று ஐந்து மாதங்கள் நிறைவடைந்து உள்ளதாகவும், கருவில் உள்ள குழந்தை அசைவுகளுடன் நல்ல நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்ட வைஜயந்தி அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து வைஜயந்தியின் குடும்பத்தினர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று, அங்கு மருத்துவர்களை சந்தித்து முறையிட்டுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட சுகாதார இணை இயக்குநரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது குழந்தையை எப்படி காப்பாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள வைஜெயந்தி, தவறுதலாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக மருத்துவர் கள் கூறும்போது, இது போன்ற தவறுகள் ஒரு சில நேரங்களில் நடப்பதுண்டு. கர்ப்பிணி பெண் அரசுக்கு விண்ணப்பித்தால், அரசின் சார்பில் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago