வேளாண் அதிகாரிகள் முன்னிலையில், நன்செய் புளியம்பட்டியில் பாரம்பரிய நெல் சாகுபடி போட்டி நடந்தது.
தமிழக அரசு பாரம்பரிய நெல் சாகுபடியில் மாநில அளவில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு, எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதினை அறிவித்துள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, மாநில அளவில் முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பல விவசாயிகள் பாரம்பரிய நெல் பயிர் விளைச்சல் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரத்திற்குட்பட்ட நன்செய் புளியம்பட்டி கிராமத்தில் சக்திவேல் என்பவரது வயலில் சாகுபடி செய்யப்பட்ட ‘தங்கச் சம்பா” என்ற பாரம்பரிய நெல் ரகம் பயிர்விளைச்சல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. அங்கு நடுவர்கள் முன்னிலையில் அரை ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்டது.
இந்த அறுவடைக்கு நடுவர்களாக திருப்பூர் வேளாண்மை இணை இயக்குநர் மனோகரன், ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், முன்னோடி விவசாயி விவேகானந்தன் ஆகியோர் இருந்தனர்.
இயந்திரம் மூலம் நெல் பயிர் அறுவடை செய்யப்பட்டு, வயலில் கிடைத்த மகசூல் கணக்கீடு செய்யப்படும் எனவும், அதன் விவரங்கள் சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பிப் பரிசீலிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அறுவடையின் போது ஈரோடு வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) ஆசைத்தம்பி, தூக்கநாயக்கன்பாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago