முசிறி - குளித்தலை இடையே கதவணைக் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் 2 நாள் தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கிய முதல்வர் பழனிசாமி, தொட்டியம் பண்ணைத் தோட்டம் பகுதியில் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது முதல்வரிடம் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்:
தொட்டியம் பகுதியில் வாழை, வெற்றிலை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதை தடுக்க ஜன.28-ம் தேதிக்கு பிறகும், தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். லாலாபேட்டை- தொட்டியம் இடையே தடுப்பணை கட்ட வேண்டும்.
பூவன் வாழையில் இருந்து ஒயின் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் வாழைப் பழத்தையோ, வாழை உலர் பழத்தையோ சேர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
பின்னர், முசிறி கைகாட்டி பகுதியில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘முசிறி - நாமக்கல் சாலை நான்குவழிச் சாலையாக மாற்றப்படும். முசிறி - குளித்தலை இடையே கதவணைக் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.
பின்னர், சமயபுரம் நம்பர் 1 டோல்கேட், வாளாடி ஆகிய இடங்களில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘தமிழகத்தில் சாலை, பாலம் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள், நலத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவை முழுமை பெற வேண்டுமெனில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் ஆதரவளிக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, மாந்துறை, புள்ளம்பாடி, திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை, கரூர் பைபாஸ் சாலை உள்ளிட்ட இடங்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நிகழ்ச்சிகளில், அமைப்புச் செயலா ளர் டி.ரத்தினவேல், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர் சிவபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago