திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நேற்று மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நேற்று அதிகாலை 3 மணிக்கு தாமிரசபையில் பசு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 3.30 மணி முதல் 4.30 மணிவரை நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
ராஜவல்லிபுரம் தாமிரசபை செப்பறை அழகியகூத்தர் திருக்கோயிலில் நேற்று அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு கோபூஜை மற்றும் ஆருத்ரா தரிசனம், மதியம் 1 மணிக்கு நடன தீபாராதனை நடைபெற்றது.
தென்காசி
குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி, அம்பாள், நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று நடைபெற்றது. கோயிலில் உள்ள திரிகூட மாடத்தில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆனந்த பைரவி நாதஸ்வர இசையுடன் ஆருத்ரா தரிசனம், தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு திருவனந்தல் பூஜை, திருப்பள்ளியெழுச்சி நடைபெற்றது. பின்னர், நடராஜருக்கு 16 வகை திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது. காலை 4.50 மணிக்கு கோ பூஜையும் அதனைத் தொடர்ந்து நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் நடராஜர் பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள நடராஜர் சந்நிதியில் திருவாதிரை திருநாளை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோயில், ஏரல் அருகேயுள்ள மாரமங்கலம் சந்திரசேகர சுவாமி திருக்கோயில், குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் வசந்த மண்டபத்தில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன பூஜை நடந்தது. கோவில்பட்டி புற்றுக்கோயிலான சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோயிலில் சிவன் சந்நிதிக்கு முன் நடராஜர் அலங்கரிக்கப்பட்டு கோமாதா பூஜையும், ஆருத்ரா தரிசன பூஜையும் நடந்தது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago