கிருஷ்ணகிரியில் 2 கிலோ தங்கம் தருவதாகக் கூறி கோவை வியாபாரியிடம்ரூ.95.43 லட்சம் கொள்ளை

By செய்திப்பிரிவு

கோவையைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி அஸ்வின். இவரைத் தொடர்பு கொண்ட ராஜசேகர் என்பவர், தன்னிடம் அதிக அளவில் தங்கம் உள்ளதாகவும், ரூ.1 கோடி பணத்துடன் கிருஷ்ணகிரிக்கு வந்தால் 2 கிலோ தங்கம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய அஸ்வின், தனது இரு நண்பர்களை அழைத்து கொண்டு, ரூ.95.43 லட்சம் பணத்துடன் வேனில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரிக்கு வந்தார். கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவின் மேம்பாலம் அருகே வேனை நிறுத்திய அஸ்வின், ராஜசேகரை தொடர்பு கொண்டார். அங்கு ராஜசேகர், தனது கூட்டாளிகள் சிலருடன் காரில் வந்தார். பணத்துடன் அஸ்வின் உட்பட 3 பேரையும் காரில் ஏற்றிக் கொண்டார்.

கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் பனகமூட்லு பகுதியில் தனியார் கல்லூரி அருகே அஸ்வின் உள்ளிட்டோரை காரில் இருந்து கீழே இறங்குமாறு கூறிய ராஜசேகர், அவர்களது கவனத்தை திசை திருப்பிவிட்டு, ரூ.95.43 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றார். அதிர்ச்சியடைந்த அஸ்வின் நேற்று மாலை கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நகர காவல் போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், பணத்தைக் கொள்ளையடித்த மர்ம கும்பல், சிவகாசி, காஞ்சிபுரம், சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்