நோய் தாக்குதல் குறித்து அறிய நெல் வயல்களில் களப்பணியாளர்கள் ஆய்வு வேளாண் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

கீழ்பவானி பாசனப் பகுதியில் அறுவடைக்குத் தயாராகி வரும் நெல் வயல்களில், நோய்தாக்குதல் உள்ளதா என வேளாண் துறை களப்பணியாளர்கள் ஆய்வு செய்து வருவதாக ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நேற்று நடந்தது. காணொலிக் காட்சி வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில், 13 ஒன்றியங்கள் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் என 15 இடங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஆட்சியர் சி.கதிரவன் பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் நவம்பர் மாதம் முடிய 84 ஆயிரத்து 559 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நெல் விதைகள் 342 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 27 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 26 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 115 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்திற்குத் தேவையான உரங்கள் மற்றும் பிற இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள தடப்பள்ளி அரக்கன் கோட்டை, காலிங்கராயன் மற்றும் மேட்டூர் வலது கரை வாய்க்கால் ஆயக்கட்டு பகுதிகளில்,நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் நடந்து வருகிறது. கீழ்பவானி ஆயக்கட்டு பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்ட நெல் முதிர்ச்சி பருவத்தில் உள்ளது. இப்பகுதி வயல்களில் வேளாண்மைத்துறை களப்பணியாளர்கள் ஆய்வு செய்து, பாதிப்பு ஏதேனும் இருந்தால், பூச்சிநோய் கட்டுப்பாடு முறைகளை விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து வருகின்றனர், என்றார்.

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கு ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கூட்டம் நடந்த இடங்களில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, கோபி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்