கடந்த முறை கிராமம் கிராமமாகச் சென்று கோரிக்கை மனுவை வாங்கிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அதை எங்கே கொடுத்தார். ஆளுங்கட்சியான எங்களிடம் கொடுத்தால்தானே அதற்கு தீர்வு கிடைக்கும், என முதல்வர் பழனிசாமி பேசினார்.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ராசிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
ஸ்டாலின் தினமும் பொய்யான அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இந்த ஆட்சியின் வளர்ச்சியை அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி தெரியாது. விவசாயிகளே ஒரு நாட்டின் முதுகெலும்பு. ஒவ்வொருவரும் சோற்றில் கை வைக்கும்போது தான் விவசாயிகளின் அருமை புரியவரும். திமுக குடும்ப கட்சியாக உள்ளது. கார்ப்பரேட் கட்சிதான் திமுக. ராசிபுரத்தில் ரூ.55 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.1,063 கோடி மதிப்பில் ராசிபுரத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் பகுதியில் 2,235 ஏக்கர் நிலத்தை வரைமுறைப்படுத்தி விவசாயிகளுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் சந்திக்கலாம். ஆனால் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினை கட்சி நிர்வாகிகள் கூட சந்திக்க முடியாது. ஒரு அறையில் அமர்ந்து ஆன்லைனில் நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறார். நாங்கள் இதை சுட்டிக் காட்டிய பிறகுதான் மக்களை சந்திக்க கிளம்பியுள்ளார். பொய்யான வாக்குறுதிகளை தந்து திமுகவினர் எம்பி ஆகிவிட்டனர். அதை நம்பி மக்கள் ஏமாந்து நிற்கின்றனர்.
கடந்த முறை கிராமம் கிராமமாகச் சென்று கோரிக்கை மனுவை வாங்கிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அதை எங்கே கொடுத்தார். ஆளுங்கட்சியான எங்களிடம் கொடுத்தால்தானே அதற்குத் தீர்வு கிடைக்கும். அதிமுகவில் உழைக்கும் மக்கள் உள்ளனர். மக்களை மதிக்கும் கட்சியாக அதிமுக உள்ளது, என்றார்.
திருச்செங்கோட்டில் புறவழிச்சாலை
திருச்செங்கோடு நெற்குத்தி மண்டபம் அருகே நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் புதிய சாலை திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. திருச்செங்கோடு- ஈரோடு, திருச்செங்கோடு- சங்ககிரி - கொங்கணாபுரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. திருச்செங்கோடு நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. பூலாம்பட்டிகூட்டு குடிநீர் திட்டப் பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.மண்ணின் மைந்தரும் சென்னை மாகாண முன்னாள் முதல்வருமான டாக்டர் சுப்பராயன் உருவப்படம் சட்டப்பேரவையில் இன்னும் ஒரு மாதத்தில் திறக்கப்படும். கரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு இன்று இந்தியாவிலேயே கரோனா தடுப்பில் முதன்மை மாநிலமாக உள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒரு கோடியே 65 லட்சம் பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என பிரதமரே பாராட்டியுள்ளார்.
தமிழக அரசு ஏற்கெனவே தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது முதலீட்டாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம் ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. தமிழகம் அனைத்து துறைகளிலும் தேசிய விருதை பெற்று வருகிறது, என்றார்.
தொடர்ந்து ரிக், லாரி, நெசவு, நகைக்கடை, பாடிபில்டிங் சங்க நிர்வாகிகள், விவசாயிகள், அமைப்பினர் உள்ளிட்டோருடன் முதல்வர் கலந்துரையாடினார்.
அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா, முன்னாள் எம்பி பி.ஆர்.சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர் பொன்.சரஸ்வதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago