சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது நாளை தரிசன விழா: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று (டிச.29) நடை பெறுகிறது. நாளை தரிசன விழா நடைபெறுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனவிழா கடந்த 21-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேரோட்டம் இன்று (டிச.29) நடைபெறுகிறது.

இன்று காலை கோயிலில் இருந்து நடராஜ பெருமான், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஷ்வரர் ஆகிய சுவாமிகள் தேரில் எழுந்தருள்வார்கள். பின்னர் கீழவீதியில் பக்தர்கள் வடம் பிடிக்க 5 தேர்களும் புறப்பட்டு தெற்குவீதி, மேலவீதி,வடக்கு வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். மாலை கீழவீதியில் உள்ள நிலைக்கு தேர்கள் வந்தடையும்.

தேரோட்டம் முடிந்த பிறகு கோயில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் நடராஜ பெருமானுக்கும், சிவ காமசுந்தரி அம்பாளுக்கும் லட்சார்ச்சணை நடைபெறும். இதனைத் தொடர்ந்து நாளை (டிச.30) அதிகாலை ஆயிரங் கால் மண்டப முகப்பில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மஹாஅபிஷேகம் நடைபெறும். அன்று காலை 10 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்பகுதி திருவாபரண அலங்காரத் தில் நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரி அம்பாளும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

இதனை தொடர்ந்து நாளை மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் வீதியுலா முடிந்து தீர்த்தவாரி நடந்தவுடன் தரிசன விழா நடைபெறும். இதற் கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர். எஸ்பி அபிநவ் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.வெளியூர் பக்தர்களும் தரிசன விழாவில் கலந்து கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு தேரோட்டம் மற்றும் தரிசன விழாக்கள் நடத்திட மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்