ஈரோட்டில் ஒரு வார வேலை நிறுத்தத்திற்குப் பின்னர், விசைத்தறிகள் இயங்கத் தொடங்கிய நிலையில், நூல் விலை மேலும் உயர்ந்துள்ளதால் விசைத்தறியாளர்கள் வேதனை யடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் அசோக புரம், மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சூளை உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல் பட்டு வருகின்றன. இதில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் ரயான் துணிவகை உற்பத்தி செய்யப்படுகிறது. நூல் விலை உயர்வால் விசைத்தறித் தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கடந்த 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் முடிவுக்கு வந்து, நேற்று முதல் விசைத் தறிகள் இயங்கத் தொடங்கின. ஆனால், ரயான் துணி உற்பத்திக்கான நூலின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் விசைத் தறியாளர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.
இதுதொடர்பாக விசைத்தறி உரிமை யாளர்கள் தரப்பில் கூறியதாவது:
நூல் விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக நடந்த வேலை நிறுத்தம் காரணமாக ரூ.40 கோடி மதிப்பிலான ஒரு கோடியே 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொழிலாளர்கள் நலன்கருதி வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதே நேரத்தில் ரயான் துணி உற்பத்திக்கான நூல் விலை ஒரு வாரத்தில் கிலோவுக்கு ரூ.22 உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ .172-க்கு கிடைத்த நூல், தற்போது, ரூ.194-க்கு விலை உயர்ந்துள்ளது. ரயான் நூலைத் தொடர்ந்து தற்போது காட்டன் நூலின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் விசைத்தறியாளர்கள் அனைவரும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளோம். மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சினையில் தலையிட்டு, நூல் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago