நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களிடம் கருத்து கேட்ட திமுக தேர்தல் அறிக்கை குழு

By செய்திப்பிரிவு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கைதயாரிக்கும் குழுவினர் திருநெல்வேலியில் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், ஆட்டோ, கார் ஓட்டுநர்கள், கோயில் அர்ச்சகர்கள், மீனவர் சங்கத்தினர், கட்டிட தொழிலாளர்கள், மருத்துவர்கள், கட்டுமான பணியாளர்கள், சிறு, குறுந்தொழில் முனைவோர் என பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுகசெயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்டசெயலாளர் அப்துல் வகாப், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாபன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. துரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளைச் சேர்ந்தவர்களின் கோரிக்கை மனுக்களையும் குழுவிடம் அளித்தனர்.

புயல், கடல் சீற்ற காலங்களில் மீன்பிடிக்க செல்ல முடியாமல் இருக்கும் மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண் டும் என, ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுகபொறுப்பாளர் மி. ஜோசப் பெல்சி மனு அளித்தார்.

தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு ஆகியவற்றை இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,

பாளையங்கோட்டையில் இருபாலர் பயிலும் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும், தாமிரபரணியில் கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருநெல்வேலி- தென்காசி, திருச்செந்தூர்- அம்பாசமுத்திரம் நான்கு வழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அளித்தார்.

தூத்துக்குடி

டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், மகளிரணி செயலாளர் கனிமொழி ஆகியோர், தூத்துக்குடி கலைஞர்அரங்கில் நேற்று மாலை பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினர். இக்குழுவினரை திமுக நிர்வாகிகள், தொழில் வர்த்தக சங்கநிர்வாகிகள், வணிகர்கள், தீப்பெட்டிஉற்பத்தியாளர் சங்கத்தினர், விவசாய சங்கம்,ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டபல்வேறு அமைப்பினர் தனித்தனியாக சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.மனுக்களை பெற்றுக்கொண்ட குழுவினர், அவற்றை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக உறுதியளித்தனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பெ.கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, மாநில இளைஞரணிதுணைச் செயலாளர் எஸ்.ஜோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்