குற்றாலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார்.
குற்றாலத்தில் கடந்த 15-ம் தேதி முதல் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் விடுமுறை இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், அங்கு சமூக இடைவெளி கேள்விக்குறியானது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், குற்றாலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தென்காசி ஆட்சியர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உடனிருந்தார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, “குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கை சவாலாக உள்ளது.
புத்தாண்டையொட்டி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வர வாய்ப்பு உள்ளதால், 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் யாருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை. தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக் கூடாது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago