சசிகலாவின் வருகை அதிமுகவில் நிச்சயம் சலசலப்பை ஏற்படுத்தும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
கோவை செழியனின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு, கொமதேக சார்பில் திருப்பூரில் நேற்று மருத்துவ முகாம், ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்த ஈஸ்வரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தை ஆளும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்து ஒரு மாதமாகிறது. ஆனால், இதுவரை பாஜக எந்த பதிலும் சொல்லவில்லை. அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பாஜக கூட்டணியில் அவர் முதல்வர் வேட்பாளர் இல்லை என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுகவினரால் கூற முடியவில்லை. எந்த அரசியல் கட்சிக்கும் வராத நிலை, தற்போது அதிமுகவுக்கு வந்துள்ளது வேதனையாக உள்ளது.
வேளாளர் சமூகத்தின் பெயரை வேறு பிரிவினருக்கு வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வர் அவசரகதியில் முடிவெடுத்துள்ளார். இதனால், தமிழகத்தில் சாதிக் கலவரம் ஏற்படக்கூடிய சூழலை அவர் ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக தேர்தல் பணிகளில் ஆளுங்கட்சி ஈடுபட்டு வருகிறது. ஆனால், தேர்தல் முடியும் வரை எதிர்க்கட்சிகள் செயல்படக்கூடாது என்று அதிமுகவினர் கருதுகின்றனர். தேர்தலைக் கருத்தில் கொண்டே, பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 பரிசு என அறிவித்துள்ளனர். எனினும், இதன் பலனை அதிமுகவினர் அறுவடை செய்ய முடியாது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும்.
திருப்பூர் தொழில் துறை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு, பாதிக்கப்பட்டுள்ள பின்னலாடைத் துறையைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல, மத்திய பாஜக அரசும் கடந்த 7 ஆண்டுகளில், மக்கள் வளர்ச்சிக்காக எதுவுமே செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago