திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திருத்தணி அருகே திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேஸ்வரர் கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், கோயில் விதிகளுக்கு உட்பட்டும் இந்த ஆருத்ரா அபிஷேக நிகழ்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருவாதிரை நட்சத்திர தினமான நாளை (டிச. 29) காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடராஜருக்கு, பழைய ஆருத்ரா மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வுகள் உபயதாரர்கள், பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட உள்ளன.
நடராஜருக்கு நடைபெறும் அபிஷேக நிகழ்ச்சிகளை பக்தர்கள் யூ டியூப் மற்றும் பொதிகை தொலைக்காட்சி, உள்ளூர் தொலைக்காட்சிகளில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில், இரவு 9 மணி முதல், மறுநாள் அதிகாலை வரை நடைபெறும் ஆருத்ரா அபிஷேகம், அலங்காரம், சுவாமி புறப்பாடு மற்றும் கொடி மரம் அருகில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம், மறுநாள் காலை 7 மணியளவில் சுவாமி பழையனூர் செல்லுதல், திரும்பி வருதல் மற்றும் அனுகிரக தரிசனம் ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 30-ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago