நெய்வேலி அருகே மயானம் ஆக்கிரமிப்பு சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சியில் உள்ள கீழ் வடக்குத்து பகுதியில் சுமார் ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் உயிரிழந்தால் அவர்களை கீழூர் சாலையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று கீழ் வடக்குத்து பகுதியைச் சேர்ந்த அபூர்வம் என்பவர் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்ய வழக்கம்போல் கீழூர் சாலையில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மயானத்தில் சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் மயானத்திற்கு சொந்தமான இடத்தில் உடல் அடக்கம் செய்ய போதுமான இடவசதி இல்லை. இதையடுத்து உறவினர்கள் உடலை அடக்கம் செய்யாமல் விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலையில் வடக்குத்து பேருந்து நிலையம் எதிரில் உடலை வைத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழுத் தலைவர் கலையரசி கோவிந்தராஜ், வடக்குத்து ஊராட்சி தலைவர் அஞ்சலை குப்புசாமி, நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல் அமீது, கிராம நிர்வாக அலுவலர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஏற்கெனவே அடக்க செய்த பழையஇடத்தில் உடலை அடக்கம் செய் வது எனவும், அங்குள்ள இடத்தில் விரைவில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆக்கிரமிப்பு செய்த இடத்தை அகற்றி தருவது எனவும், அல்லது புதிய இடத்தில் மயானம் அமைத்து தருவது எனவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த திடீர் சாலை மறியலால் விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்