ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப் பகுதியில், 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குநர் பூங்குன்றன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் வனப்பகுதியில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டு தொடர்பான தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டபோது, உள்ளூரில் தனது சமூகத்தைக் காக்கும் பூசலில் மாண்ட வீரனின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் கல்வெட்டு எனத் தெரியவந்துள்ளது.
" மல்லு" எனத் தொடங்கும் இக்கல்வெட்டின் முதல் மூன்று வரிகளில் கன்னட மொழியின் தாக்கம் தெரிகிறது. அதற்கு அடுத்த வரிகளில் பூசல் எதன் பொருட்டு நடந்தது என்பதை அழகிய தமிழ் நடையில் விவரிக்கிறது.
தமிழகத்தில் கிடைக்கும் பெரும்பாலான எழுத்துநடை நடுகற்கள் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டவை. அவற்றில் அரசன் பெயர், இனக் குழு தலைவர் பெயர், அவருடைய சேவகன் பெயர் என அடுத்தடுத்து வரும். பர்கூர் மலைப்பகுதியில் கிடைத்துள்ள இக்கல்வெட்டில் முதன் முறையாக கல்லில் வீரனின் உருவத்தை செதுக்கி, அவனின் புகழை முத்தான எழுத்தில் பொறித்த கலைஞன் குறிக்கப்படுகிறார். தமிழகத்தில் முதன் முறையாக தச்சனின் பெயர் தாங்கிய கல்வெட்டு பர்கூர் மலையில் கிடைத்திருப்பது தமிழ் வரலாற்றில் ஓர் புதிய செய்தியாகும்.
யாக்கை தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த அன்புமணி, சித்தலிங்கன், குமரவேல் ராமசாமி, சுதாகர் நல்லியப்பன் ஆகியோர் பர்கூர் கல்வெட்டினை படியெடுத்துள்ளனர், எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago