திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை: இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி மேற்கொள்ளப்படும் வேளாண்மைக்கும், அதன் மூலம் விளைவிக்கப்படும் விளைபொருட் களுக்கும் தமிழ்நாடு அரசின் தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் அளிக்கப்படும் தரச்சான்றிதழ், மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின்படி அளிக்கப்படுவதால் இந்தச் தரச்சான்றிதழ் மூலம் அங்கக விளைபொருட்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
அங்ககச் சான்றளிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்ப படிவம் 3 நகல்கள், பண்ணையின் பொது விவரக்குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர்த் திட்டம், துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நில ஆவணம் பட்டா சிட்டா, நிரந்தர கணக்கு எண் அட்டை நகல், ஆதார் நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி திருநெல்வேலி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அங்கக சான்றளிப்புக்கு தனி நபராகவோ அல்லது குழுவாகவோ விண்ணப் பிக்கலாம். பெருநிறுவனங்களும் இதற்கு விண்ணப்பம் செய்யலாம்.
இதற்கான கட்டணம் சிறு, குறு விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.2,700, பிற விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.3,200, குழு பதிவுக்கு ரூ.7,200, பெருநிறுவனங்களுக்கு ரூ. 9,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள 32, ராஜராஜேஸ்வரி நகர், என்ஜிஓபி காலனியில் இயங்கி வரும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை 0462-2554451 என்ற எண்ணிலோ அல்லது விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநரை 9443407463 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் இதுகுறித்த விவரங்களை https://www.tnocd.net/ என்ற இணையதளத்திலும் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago