நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 18 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளது, என மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட ஜங்கமநாயக்கன்பட்டி, கபிலர்மலை வட்டாரம் பெரியசோழிபாளையம் ஆகிய இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மினி கிளினிக்குகளை திறந்து வைத்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் 53 மினி கிளினிக்குள் தொடங்கப்படவுள்ளது. முதல் கட்டமாக 18 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்படும்.
எலச்சிபாளையம், மல்ல சமுத்திரம், பரமத்தி ஒன்றியத்தில் சில பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூட்டுக்குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
வாங்கிய கடனை திரும்பி செலுத்துவதில் நாமக்கல் மாவட்டம் முதன்மை மாவட்டமாக விளங்குகிறது. 98 சதவீத கடன் தொகை திரும்ப செலுத்தப்படுவதால் வங்கிகள் அதிக அளவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி வருகின்றன, என்றார்.
முன்னதாக கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஆர்.சாரதா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் ஜெ. பி.ரவி, ச.ஜெயசுதா, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago