பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் பெற வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணி நேற்று முதல் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நடைபெற்றது.
பொங்கல் பரிசுத் தொகுப்பாக முழு கரும்பு, முந்திரி, திராட்சை, சர்க்கரை, பச்சரிசி மற்றும் ரூ.2,500 ரொக்கம் உள்ளிட்டவை வரும் ஜனவரி 4-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் அரிசி ரேஷன் கார்டுதார்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நேற்று முதல் சேலத்தில் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக வட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, “ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.2,500 வரும் ஜனவரி 4-ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றி பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ரேஷன் கடையிலும் நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
நாமக்கல்லில் 5.22 லட்சம் பேர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 22 ஆயிரத்து 220 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஜனவரி 4-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் வழங்கப்படும். மேலும், ரேஷன் கடைகளில் சுழற்சி முறையில் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு வரும் 30-ம் தேதி வரை வீடுதோறும் சென்று ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்படும்.
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 04286-281116 என்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago