திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகேயுள்ள அல்லூர் சாய்லட்சுமி நகரிலுள்ள ஆளில்லாத வீடுகளில் புகுந்து திருட முயன்றதாக 2 இளைஞர்களை நேற்று முன்தினம் அந்த கிராம மக்கள் விரட்டிப் பிடித்தனர். அப்போது அவர்கள் பொதுமக்களை தாக்க முயன்றதால், பொதுமக்களும் திருப்பித் தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஒருவரை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் லோடு ஆட்டோ மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பொதுமக்களிடம் சிக்கிய மற்றொரு இளைஞரிடம் ஜீயபுரம் போலீஸார் விசாரித்தனர்.
அப்போது, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நபர் கேரள மாநிலம் கிருஷ்ணகிருபா பகுதி யைச் சேர்ந்த அரவிந்த்(25) என்பதும், இறந்த நபர் திருவனந் தபுரம் மழையங்கீழ் பகுதியைச் சேர்ந்த திபு(24) என்பதும் தெரிய வந்தது.
பொதுமக்கள் விரட்டியதால் தப்பியோடியபோது தடுமாறி கீழே விழுந்ததால் திபு இறந்ததாக கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். அதன்பேரில் சந்தேக மரணம் பிரிவின் கீழ் ஜீயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸிடம் சிக்கியுள்ள அரவிந்த் உண்மை தகவல்களை கூற மறுப்பதால், திபு தொடர்பான தெளிவான முகவ ரியை போலீஸாரால் கண்டறிய முடியவில்லை. எனவே, திபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளனர்.
இதற்கிடையே, திபுவை பொதுமக்கள் கட்டிப்போட்டு தாக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. எனவே, திபுவை அல்லூர் கிராம மக்கள் அடித்துக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா, இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக 3 தனிப்படைகளை அமைத்து உத்தர விட்டார். அதன்பேரில் அல்லூரில் உண்மையில் நடைபெற்ற நிகழ்வு என்ன? என்பது குறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதன்பின், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago